இதயத்தைப் பிசையும் மணிவண்ணனின் கடைசி குரல்!
இங்கே நீங்கள் படிப்பது, இயக்குநர்- நடிகர்-சமூகப் போராளி அமரர் மணிவண்ணன், தன் மரணத்துக்கு சில தினங்கள் முன்பு ஒரு பண்பலை வானொலியில் தன் குரு பாரதிராஜாவுக்கு செலுத்திய மரியாதை இது. கண்களைப் பனிக்க வைக்கும் மணிவண்ணனின் அந்த கடைசி குரல்... "இன்றைக்கு மணிவண்ணன் என்கிற ஒரு திரைப்பட இயக்குநர் என்கிற அடையாளம் தந்தது, எனது குருநாதர், என் ஆசான், நான் இப்போதும் போற்றும் இயக்குநர் பாரதிராஜாதான். அவர் இல்லாமல் இருந்திருந்தால், என் வாழ்க்கை எங்கேயோ திசைமாறிப் போயிருக்கும். நான் சொன்ன ‘நிழல்கள்' என்கிற கதையைக் கேட்டு சிலாகித்துப் போய் அதையே தன்னுடைய அடுத்த படத்துக்கான கதையாக முடிவு செய்து அந்தப்படத்துக்கு வசனமும் எழுதும் வாய்ப்பையும் எனக்கு தந்தார்கள். ஆனால் அந்தப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அப்போது பாரதிராஜா அவர்களுடைய நண்பர்கள் "சொன்னா கேட்கமாட்ட எவனோ ஒருத்தன் கோயம்புத்தூர்ல இருந்து கண்ணாடி, ஜிப்பா போட்டுட்டு வந்தான். அவனை ஒரு பெரிய அறிவாளியா நெனச்சிக்கிட்டு நீ வந்து இந்தப்படத்தை எடுத்து, இதுவரைக்கும் பெயிலியரே கொடுக்காத... நீ இப்போ ஒரு பெயிலியர் கொடுத்து, உன் பேரை கெடுத்துட்ட பாத்தியா... சக்சஸ் குடுக்கலே"ன்னு சொன்னாங்க. அப்போ அவரு சொன்னாரு.., நான் வந்து இதே மணிவண்ணனை வெச்சு ஒரு சூப்பர் ஹிட் கொடுக்குறேனா? இல்லையான்னு பாருங்கன்னு சொல்லி, மணி உன்ன நம்பி அவனுங்ககிட்ட நான் வார்த்தை கொடுத்துட்டேன். நீதான் பொறுப்பு.. அந்தக்கதையை நீ எப்படி எழுதுவியோ எனக்கு தெரியாது, உனக்கு ஒரு பத்து நாள் டைம் தர்றேன்னு சொன்னாரு. அதுக்கப்புறம் நான் எழுதின படம்தான் ‘அலைகள் ஓய்வதில்லை'. அந்தப்படம் தமிழக அரசினுடைய 9 விருதுகளை பெற்றுத் தந்தது. அதில் சிறந்த கதையாசிரியர் மற்றும் சிறந்த உரையாடல் ஆசிரியருக்கான இரண்டு விருதுகளை நான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களிடத்தில் இருந்து பெற்றேன். இன்றைக்கும் அரசியல் ரீதியாக, சில சொந்த விறுப்பு,வெறுப்புகளில் நான் விலகி இருந்தாலும் கூட - அம்மா அப்பாக்கிட்ட சண்டை போடுறதில்லையா அந்த மாதிரி தான்... - அவரை வந்து நான் எப்போதும் என்னுடைய இரண்டாவது தாய், இரண்டாவது தந்தை என்று தான் நினைக்கிறேன். அவரைப்பற்றி நான் நினைக்கும் போதெல்லாம் எனக்கு என்னை அறியாமல் எனக்குள் ஒரு நெகிழ்ச்சி ஏற்படும். அந்த நன்றி உணர்வு தான் இன்றைக்கு எனக்கு சோறு போட்டுக் கொண்டிருக்கிறது என்று கூட நம்புகிறேன். என் நேசத்துக்குரிய ஆசான் அப்பா வணக்கம், இன்னைக்கு உங்களுடைய ஆசீர்வாதத்தால, உங்களுடைய அரவணைப்பால நான் சிறந்த நிலையில இருக்கேன். எனக்கு நீங்க தான் கல்யாணம் பண்ணி வெச்சீங்க.., நேத்து மாதிரி இருக்கு, இன்னைக்கு என் மகளுக்கும் திருமணம் ஆயிடுச்சி, என் மகனுக்கும் ஆகப்போகுது, நாட்கள் வேகமாக நகர்ந்துடுச்சு. எவ்ளோ பெரிய டைரக்டரா இருந்தாலும், எத்தனையோ பேர் நம்மளை சிலாகித்து பேசினாலும் அப்பா சத்தியமா சொல்றேன் நான் எப்பவும் பாரதிராஜாவோட அசிஸ்டெண்ட் தான்.( கண்ணீர் விட்டு அழுகிறார் மணிவண்ணன்...) நான் பாரதிராஜாவோட அசிஸ்டெண்ட் தான், என்மேல ஏதாவது கோபம் இருந்தா என்னை ஒரு அறை விட்டுருங்க; தயவுசெய்து பேசாம மட்டும் இருக்காதீங்க.., ப்ளீஸ்... ப்ளீஸ்பா...." - மெல்லக் கரைகிறது மணிவண்ணனின் குரல். நீரால் நிறைகின்றன கண்கள்! ஆனால், இதற்கு பாரதிராஜா ஆனந்த விகடனில் மணிவண்ணன் குறித்து கடுமையான கருத்துக்களுடன் பதில் பேட்டி தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment